ராகுல் காந்தியை தகுதிநீக்கம் பண்ண உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனு!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை சூரத் மாவட்ட நீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி ராகுலை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து ராகுல் காந்தி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பிரபல தொழில் அதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு பிரதமர் மோடியை அவதூறு செய்வது போல் உள்ளதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இன்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பளித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் உத்தரவிட்டது. ராகுல் காந்தி தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவருக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கியது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வினீத் ஜிண்டால் என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புகார் மனு கொடுத்துள்ளார். மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3) படி எம்.பிக்கள்/ எம்.எல்.ஏக்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் குற்றசாட்டு நிரூபணம் செய்யப்பட்ட தினத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட விதிகளின் படி, ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக இன்றே அறிவிக்க முடியும். எனவே, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து உடனடியாக சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தனது மனுவில் வினித் ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த தீர்ப்பு குறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ‘ராகுல் காந்தி வழக்கில் இப்படி நடக்கும் என எங்களுக்கு முன்பே தெரியும்’ என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ராகுல் காந்திக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வழக்கில் இப்படி நடக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஏனெனில் அவர்கள் நீதிபதிகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.

அவதூறு வழக்கு தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி, “எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதை அடைவதற்கான வழி” என்று பதிவிட்டு இருந்தார்.