இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் தொடர்பாக டெல்லியில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பல கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. மாறாக பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைக்க கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றன.
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் “நேர்மையான சுதந்திரமான தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மிகவும் துல்லியாக இருக்க வேண்டும். சந்தேகம் எழுந்தால் தலைமை தேர்தல் ஆணையர் தீர்த்து வைக்க வேண்டும். ‘சிப்’ பொருத்தப்பட்ட எந்த இயந்திரத்திலும் தில்லுமுல்லு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறும் நிலையில் பேராசை கொண்ட சக்திகளால் ஜனநாயகம் களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது. நேர்மையான தேர்தல் நடப்பதற்காக, நாம் அனைவரும் அமர்ந்து ஆலோசனை நடத்த வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறித்த சந்தேகங்களை இந்திய தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தீர்க்க வேண்டும் என தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள சந்தேகம் மற்றும் பயங்களை போக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என கூறினார். மேலும் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் சார்பில் அணுகவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறுகையில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தனித்துவமான இயந்திரங்கள் என இந்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் அது அப்படியில்லை என சிலர் கூறுகின்றனர். வேட்பாளர்கள் பெயர், கட்சி சின்னங்கள் உள்ளிட்டவை இணையதளம் மூலம் உள்ளீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகங்களை இந்திய தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும்” என்றார்.
இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான விஷயத்தில் நாங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வ பதில்களைப் பெற விரும்புகிறோம். அவர்கள் அதை செய்விட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோர். உலகில் உள்ள எந்த இயந்திரத்தையும் முடக்க முடியும் என கூறுகின்றன. இதனால் தான் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை” என்றார்.