ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வயநாடு மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பேசிய விஷயம் சர்ச்சையாக மாறியது. அதாவது, மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை பின்னால் வைத்திருக்கிறார்களே. அதெப்படி? என்பது போல் கேள்வி எழுப்பியிருந்தார். இது பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இருந்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறார். அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அதேசமயம் ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ரயில் மறியல், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரிக்கப்படும் வரை நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வர மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்த சூழலில் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து நீக்கி மக்களவை செயலகம் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அடுத்தகட்டமாக மேல்முறையீடு செய்து தான் குற்றமற்றவர் என ராகுல் காந்தி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டும். ஒருவேளை மேல்முறையீடு செய்து தண்டனை நீக்கப்படும் பட்சத்தில் மீண்டும் எம்.பி பதவி திரும்ப கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் மற்றொரு சிக்கலான விஷயமும் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஏதாவது ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். அதுமட்டுமின்றி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே ராகுல் காந்தியை பழிவாங்கும் வகையில் பாஜக அரசு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தகுதி நீக்கத்தில் இருந்து 3 மாதங்கள் சலுகை பெறும் நடைமுறையும் கடந்த 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டது. இதனால் மக்கள் பிரதிநிதிகள் தண்டனை பெற்றால் உடனே அவர்களது எம்.பி அல்லது எம்.எல்.ஏக்களின் பதவி ரத்தாகும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்ற விதி உள்ளது. அதன்படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation of the People Act) பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும். பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரிவு 9இன் கீழ், ஊழல், அரசாங்க ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற காரணங்களுக்காக தகுதிநீக்கம் செய்யப்படுகிறது. தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் பிரிவு 10ன் கீழ் தகுதி நீக்கம் செய்யலாம். ஊழல் நடைமுறைகளுக்கான பிரிவு 11ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களின் பதவி பொதுவாக மூன்று முறைகளில் பறிக்கப்படும். பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது, மனநிலை சரியில்லாமல் இருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

அதேபோல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வரப்படுகிறது. அதேபோல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது ஆகிய மூன்று முறைகளில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது.

ராகுல் காந்திக்கு இப்போது வயது 52 ஆகும். தண்டனை பெறும் 2 + 6 ஆண்டுகள் என்பதால் அவருக்கு 60 வயது வரை, எம்பி மற்றும் பிரதமர் பதவிக்கு வர முடியாது. எனவே அடுத்து 64 வயதில் தான் அவர் 2034 மக்களவை தேர்தலில் களமிறங்கவே முடியும். இது மட்டுமின்றி அமலாக்கத் துறை விசாரிக்கும் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கும் வரும் காலத்தில் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து சில ஆண்டுகளாகவே பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் நேரடியாக பாஜகவில் தான் ஐக்கியமாகிறார்கள். 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ராகுல் காந்தியே ஸ்மிருதி ராணியிடம் அமேதியில் தோல்வியடைந்தார். அப்போது அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிந்ததால் அவரால் எம்பியாக முடிந்தது.

இப்போது ராகுல் தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் இதை 1977இல் ஏற்பட்ட சூழலைப் போல இருக்கும் என்றும் கூறப்படுகின்றனர். அந்த காலகட்டத்தில் எமர்ஜென்சிக்கு பிறகு, இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் மக்களவை தேர்தலில் மிகப் பெரியளவில் தோல்வியடைந்தது. அவர் சிபிஐ விசாரணைக்கும் ஆஜராக நேர்ந்தது. அந்த சமயத்தில் தான் பழிவாங்கப்படுவதைப் போல வெளிப்படுத்திய இந்திரா காந்தி, அதன் பின்னர் தன்னை போராளியாகவும் காட்டிக் கொண்டார். பீகாரில் உள்ள பெல்ச்சி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரை உயர் சாதியினர் கொலை செய்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். அங்குப் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க முடிவு செய்தார். ரயில், ஜீப், டிராக்டரில் கொட்டும் மழைக்கு நடுவிலும் சென்றார். ஒரு கட்டத்தில் யானைச் சவாரி செய்ய வேண்டியிருந்தது. அது அனைத்தையும் செய்து, அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். இது அவரது இமேஜை மாற்றப் பெரியளவில் உதவியது. அப்போது நாடு முழுக்க பிரச்சாரம் செய்த அவர், மக்களை சந்தித்தார். இது 1980இல் அவர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. எனவே ராகுல் மீதான இந்த நடவடிக்கை நல்லது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், இப்போது அதேநிலை ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்போது ஜனதா கட்சிக்கு போதிய எண்ணிக்கை இல்லாமல் இருந்தது. இதனால் பிரதமர் மொரார்ஜி தேசாயை ஓரம்கட்டி, சரண் சிங்கை கொண்டு வந்த காங்கிரஸ், பின்னர் அவரையும் காலி செய்து தேர்தலுக்கு வித்திட்டது. ஆனால், இப்போது, அந்த நிலை இல்லை. பாஜக அசுர பலத்துடன் இருக்கிறது. மேலும், ராகுல் காந்தி ஒன்றும் இந்திரா காந்தி இல்லை. அவர் தேர்தல் அரசியலிலும் எம்பியாகவும் இருந்து அரசியல் அரங்கில் காத்திருக்க வேண்டும். தனக்கான வாய்ப்பை காத்திருந்து பயன்படுத்த வேண்டும். ராகுல் காந்திக்கு இன்னும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

அதேநேரம் இது காங்கிரசுக்கு முழுமையாகக் கெட்ட செய்தி என்று மட்டும் சொல்ல முடியாது.. எம்பியாக இருக்க முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சியை பாஜகவை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான ஒரு கட்சியாக உருமாற்றம் செய்யவும் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வரவும் ராகுல் காந்திக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை தொடர்ந்து ஆதாரத்துடனும் ஆக்கப்பூர்வமாகவும் விமர்சித்து வந்தால் மட்டுமே அது மக்கள் அரங்கில் எடுபடும் என்பதால் அதை நோக்கியும் ராகுல் காந்தி இறங்க வேண்டும். இதை வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.

மேலும், அடுத்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியால் போட்டியிட முடியாது என்பதால் ராகுல் vs மோடி என்ற பேச்சும் இருக்காது. எனவே, இது பிரியங்கா காந்திக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம். பிரியங்கா காந்தி பார்க்க அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போலவே இருப்பது முதல் பல பாயிண்ட்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. உபி தேர்தலில் அவரால் காங்கிரஸுகுக்கு குறிப்பிடத் தகுந்த வெற்றியைத் தர முடியவில்லை என்றாலும் கூட அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். மேலும், மோடிக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரவும் கார்கேவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பை தரும்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி மேற்கொண்ட நகர்வு தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற லில்லி தாமஸ் vs இந்திய அரசு வழக்கில் நாட்டின் தேர்தல் சட்டத்தின் கீழ், தண்டனை பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் நீதித்துறையின் அனைத்து மேல்முறையீடுகளை கடந்தும் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் வரை பதவியில் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) ஐ உச்சநீதிமன்றம் நீக்கியது. நீக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிதிகள் 3 மாதங்களுக்குள் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என்று கூறி உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதன் காரணமாக குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்ட மேலவை உறுப்பினருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே உடனடியாக அவர்கள் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

இதனால் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு உதவும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அப்போது அதை எதிர்த்தது பாரதிய ஜனதாவோ இதர எதிர்க்கட்சிகளோ இல்லை. மன்மோகன் சிங் அரசின் அந்த அறிவிப்பை எதிர்த்தது அதே கட்சியை சேர்ந்த ராகுல் காந்திதான். ஆம், மன்மோகன் சிங் அரசாங்கம் இயற்றிய அவசர சட்டத்தை ‘முழுமையான முட்டாள்தனம்’ என்று கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமர்சித்தார் ராகுல் காந்தி. அதை கிழித்து எரிய வேண்டும் எனவும் அவர் முழக்கமிட்டார். ராகுல் காந்தியின் இந்த பகிரங்க விமர்சனம் காரணமாக மன்மோகன் சிங் அரசு அதை வாபஸ் பெற்றது.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி சொந்த கட்சி என்று பார்க்காமல் விமர்சித்ததன் மூலம் பிரதமர் நாற்காலிக்கு அவர் குறிவைத்ததாக கூறப்பட்டது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், 2 முறை இந்திய பிரதமராகவும் இருந்த மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரும் அப்போது குற்றம்சாட்டினர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கிறது. இந்த நிலையில், மன்மோகன் சிங் அரசு 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி எதிர்க்காமல் அது தற்போது நடைமுறையில் இருந்திருந்தால் ராகுல் காந்தி மக்களவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார். பிரதமர் நாற்காலிக்கு குறித்து வைத்து ராகுல் காந்தி முன்னெடுத்த நகர்வு தற்போது அவரது எம்பி பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.