உண்மையை பேசியதற்காக ராகுல் காந்தி பழிவாங்கப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும் அவர் ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்வோம் என்றும் பேசியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலின்போது, தனது கட்சிக்காக நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில், கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, பிரபல தொழில் அதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒட்டு மொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக தனது மனுவில் புர்னேஷ் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த பிறகு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியிருந்தார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கியது.
இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கண்டனம் மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உண்மையை பேசியதற்காக ராகுல் காந்தி பழிவாங்கப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கர்கே கூறியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: –
உண்மையை பேசியதற்காக ராகுல் காந்தி பழிவாங்கப்படுகிறார். உண்மையை பேசுபவர்களை வைத்திருக்க பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை. நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோருவோம். தேவைப்பட்டால் ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.