டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் அவர்களின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியானது. தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியானதால் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியானது. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். ஒரு பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோல, காரைக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் வெற்றி பெற்றிருப்பதும் தேர்வர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவிதமான தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியும், தேர்வு முடிவுகள் வராத தேர்வர்கள் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால் அவர்களின் பொது அறிவு பகுதி விடைத்தாள் திருத்தப்படவில்லை என்றும் எனவே அவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
18 லட்சம் பேர் எழுதியுள்ள குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் அவர்களின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வி என்பது சுமார் 30 விழுக்காட்டினர். அதாவது 5 லட்சம் பட்டதாரிகள், 10ஆம் வகுப்பு படித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள் தமிழில் பலவீனமாக உள்ளதை இது உணர்த்துகிறது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று மார்தட்டிக் கொண்டிருந்தவர்கள் தமிழை வளர்க்க மத்திய அரசு என்ன செய்தது என்று கேட்டவர்கள், தமிழை ஒழிக்க மாநில அரசு என்ன செய்தது என்பதை உணர்ந்திருப்பார்கள். தரமான கல்வியை இது நாள் வரை கொடுக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இதுநாள் வரை குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் (அ) ஆங்கிலம் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பிருந்த நிலையில், இம்முறை தமிழ் மொழி மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதில் தமிழக அரசு எப்படி தோல்வியுற்றது என்பதை புரிந்து கொள்ளலாம். இனி வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும்.
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்று முறைகேடுகளின் மொத்த உருவாக இந்த தேர்வு நடந்துள்ள நிலையில், 5 லட்சம் பேர் தமிழ் பாடத்தில் தோல்வி என்ற செய்தி தமிழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கும் தரத்தை, தமிழ் மொழியை திட்டமிட்டு அழித்ததை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.