சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்ற 19 வயது மாணவன் சேலம் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடுதி வார்டன் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்துகொண்ட நீட் பயிற்சி மையம் உள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார். ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவன் சந்துரு, ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்த சந்துரு, திடீரென இன்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியாத விரக்தியில் சந்துரு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்காக மாணவன் சந்துரு, கயிறு, நாற்காலி உள்ளிட்டவற்றுடன் பயிற்சி மையத்தின் விடுதி அறைக்கு வந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சி பதிவைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.