அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்தார். இவரை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். ஈபிஎஸ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வானார். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிவித்தனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் எடப்பாடி பழனிசாமி தேர்வானத்தை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி என்று கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கும் நன்றி என்று கூறினார். செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்ட போதும் அமைதியாகவும் நிதானமாகவும் பணிவாகவும் அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி என்று சொல்லி முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் உச்ச பதவி கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தாலும் கூடவே பணிவும் வந்து ஒட்டிக்கொண்டது எடப்பாடி பழனிச்சாமிக்கு.