அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது ஏன்? என்று ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது ஏன்? வேண்டுமென்றே அவருக்கு உதவவில்லையா? அல்லது காங்கிரசுக்குள் ஏதேனும் சதி உள்ளதா? கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு ஒன்றில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த காங்கிரஸ் வழக்கறிஞர்களும் ஒன்றுகூடி செயல்பட்ட நிலையில், ராகுல் விசயத்தில் அவர்கள் ஏன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை.
ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? இதன் பின்னணியில் மிகப்பெரிய கேள்வி உள்ளது. ஏற்கனவே அவதூறு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட ராகுல், மீண்டும் மீண்டும் அவதூறு கருத்துகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார். அவர் மீது இன்னும் 7 அவதூறு வழக்குகள் உள்ளன. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விசயத்தில் ஒன்றிய அரசுக்கோ அல்லது லோக்சபா செயலகத்திற்கோ எந்தப் பங்கும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் (ராகுல் காந்தி) தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.