தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, FSSAI தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தயிர் பாக்கெட் மீது ‘தாஹி’ என இந்தி வார்த்தையை அச்சிடக்கோரி மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியது. இந்த இந்தி திணிப்பு முயற்சியை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் FSSAI-ன் அறிவுறுத்தலை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவரும் இதனைக் கண்டித்து, இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, FSSAI தலைவர் ராஜேஷ் பூஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசு நிர்வகிக்கும் கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் மாநில மொழி வார்த்தைகளுக்குப் பதிலாக “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI அறிவுறுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதுமே மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய தேசிய கல்விக்கொள்கை, பள்ளிகளில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியது. நமது பிரதமர் மோடி உலக அரங்கில் பல மேடைகளில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பேசியுள்ளார். எனவே, கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.