ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காமல் அவமதிப்பு!

ரோகிணி சினிமா தியேட்டர் நிர்வாகம் சாதி ரீதியாக நரிக்குறவ இன மக்கள் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத விவகாரம் தேசிய அளவில் இப்போது சர்ச்சையாகியுள்ளது. அங்கே பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வீடியோ சர்ச்சையானது . இதற்கு முன்பும் கூட இதேபோல தியேட்டர் நிர்வாகம் தங்களை அனுமதிக்க மறுத்ததாக நரிக்குறவ மக்கள் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதோடு அவர்கள் மோசமாக நடத்தப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. எங்களை மோசமாக அவர்கள் திட்டி அனுப்புகிறார்கள் என்று நரிக்குறவ மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தியேட்டரின் மேனேஜர் நிகிலேஷ் தலையிட்டு படம் தொடங்கும் முன் அவர்களை படம் பார்க்க வைத்துள்ளார். இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதே சமயம் பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற காரணத்தால் சிறுவர்களுடன் வந்தவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்று ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக யு/ஏ படங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்க மாட்டோம். அனுமதிக்க கூடாது. ஆனால் அங்கே இருந்த பொதுமக்கள் கடுமையாக போராட்டம் செய்தனர். அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வேறு வழியின்றி அவர்களை அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது, என்று விளக்கம் அளித்தனர்.

ஆனால் இந்த விளக்கத்தை பலரும் கடுமையாக எதிர்த்து உள்ளனர். அதே சமயம் உள்ளே சென்ற நரிக்குறவர்களை வீடியோ எடுத்து நிகிலேஷ் வெளியிட்டது போன்ற விவகாரங்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது. உள்ளே வேறு ஒரு பணக்கார குடும்பம் சிறுவர்களோடு வந்து இருந்தால் இப்படி வீடியோ எடுப்பீர்களா? நிகழ்ச்சிக்கு நடுவில் இப்படி வீடியோ எடுத்து போடும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதோடு இதற்கு முன் யுஏ படத்திற்கு சிறுவர்களை, குடும்பங்களை நீங்கள் அனுமதித்ததே கிடையாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் ரோகினி சினிமா தியேட்டர் நிர்வாகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் ஜாதி காரணமாக ஓரம்கட்டுப்பட்டு உள்ளனர். நரிக்குறவர்கள் என்பதற்காக அவர்களை அனுமதிக்காமல் தடுத்து உள்ளீர்கள். அப்படி செய்துவிட்டு இப்போது சமாளிப்பதற்காக யு/ ஏ என்று நீங்கள் கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஏன் விஷயத்தை திசை திருப்புகிறீர்கள். இதெல்லாம் மிகப்பெரிய சாதி ரீதியிலான அத்துமீறல் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளனர்.

அதோடு நெட்டிசன்கள் சிலர் ஆதாரத்தோடு ரோகிணிக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அதில் Cinematograph (Certification) Rules, 1983 மற்றும் சிபிஎப்சி ரூல்ஸ்படி ஏ படத்தைதான் சிறுவர்கள் பார்க்க முடியாது. யு/எ படத்தை சிறுவர்கள் பெற்றோர்களுடன் பார்க்க முடியும். அதை அவர்கள் தனியாக மட்டுமே பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது பெற்றோர்களுடன் வந்த இவர்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? ஏன் இப்படி இந்த விவகாரத்தில் பொய்யான விஷயங்களை தெரிவிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.