தமது அதிகாரத்தை குறைத்து கொள்ள தயார்: அதிபர் கோத்தபய

புதிய பிரதமர் நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமது அதிகாரத்தை குறைத்து கொள்ளவும் தயார் எனவும் அவர் அறிவிப்பு.

கலவர பூமியாக மாறியுள்ள இலங்கை, பிரதமர் மகிந்த ராஜபக்சே தப்பியோட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக 11 எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மூன்று பேரின் பெயர்கள் தமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரையின்படி இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கும். நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தவும், அதிபரின் அதிகாரங்களை குறைத்து கொள்வது குறித்து புதிதாக அமைய உள்ள அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். புதிதாத அமையும் அரசின் மூலம் இலங்கை மக்களின் நம்பிக்கையை விரைவில் மீட்டெடுப்போம். தேசத்தின் நலன்கருதி நாட்டு மக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.