உக்ரைனில் நீண்டகால போருக்கு தயாராகிறார் அதிபர் புதின்!

உக்ரைனில் நீண்ட கால போருக்கு ரஷ்ய அதிபர் புதின் தயாராகி வருகிறார் என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷ்யா தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பல்வேறு இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, மரியுபோல் நகரத்தை உக்ரைன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போரில் ரஷ்யாவின் கவனம், இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் அங்கு பல நகரங்கள், கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியது. ஆனால் இப்போது கார்கிவ் நகருக்கு அருகே 4 கிராமங்களில் ரஷ்யா படைகளை உக்ரைன் படைகள் விரட்டியடித்து வசப்படுத்தி உள்ளன. இதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா கூறுகையில், “இது கிழக்கில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் படையினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டார்.

மரியுபோல் நகரின் அஜோவ் உருக்காலையை பிடித்து, அந்த நகரை முற்றிலுமாய் கைப்பற்றி விட வேண்டும் என்ற ரஷ்யாவின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அந்த ஆலை மீது ரஷ்யா படைகள் 34 முறை தாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அந்த ஆலையில் இருந்து பொதுமக்களை ஐ.நா. சபையும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து வெளியேற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் பொதுமக்களில் 100 பேர் அந்த ஆலையின் சுரங்கங்களில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியேற்றத்துக்காக ரஷ்யாவினால் தேர்வு செய்யப்படாத பொதுமக்கள்தான் இன்னும் அந்த உருக்காலை சுரங்கங்களில் உள்ளனர் என டொனெட்ஸ்க் பிராந்திய கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.

மரியுபோல் அஜோவ் உருக்காலைக்குள் காயங்களுடன் உள்ள வீரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கிற வீரர்களை அங்கிருந்து வெளியேற்றி, உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அனுப்ப உதவ வேண்டும் என்று ஐ.நா.வுக்கும், செஞ்சிலுவை சங்கத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதன் வினியோக பாதைகளையும், மேற்கத்திய ஆயுத ஏற்றுமதியையும் சீர்குலைக்கும் வகையில் ஒடேசாவின் முக்கிய துறைமுகம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

அதே நேரத்தில் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இதுவரை 10 படைத்தளபதிகளை இழந்துள்ளதாக அமெரிக்க ராணுவ உளவு அமைப்பின் இயக்குனர் ஸ்காட் பெரியர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் நீண்ட போருக்கு ரஷ்யா அதிபர் புதின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகி வருகிற நிலையில், அந்த பிரதேசத்தை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா முயற்சிக்கிறது, கிழக்கில் வெற்றி பெற்றாலும், சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் அமெரிக்க செனட் குழுவிடம் பேசும்போது, “டான்பாஸ் பிராந்தியத்துக்கு அப்பாலும் இலக்குகளை அடைய ரஷ்யா அதிபர் புதின் விரும்புகிறார். ஆனால் தனது லட்சியங்களுக்கும், ரஷ்யாவின் தற்போதைய வழக்கமான ராணுவ திறன்களுக்கும் இடையே பொருந்தாத தன்மையை அவர் எதிர்கொள்கிறார். போர் தொடர்வதால் ரஷ்யா அதிபர், மிகவும் கடுமையான வழிமுறைகள் பக்கம் திரும்ப இது வழிவகுக்கும்” என்று எச்சரித்தார். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு போர் உதவி நிதியாக 40 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) நிதி உதவி வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகள் செய்வதற்கு பயன்படும்.

ஐரோப்பிய வீடுகளுக்கு ஒரு மையத்தின் மூலம் ரஷ்யா செய்து வந்த சமையல் எரிவாயு வினியோகத்தை உக்ரைன் நிறுத்தியது. ஆனால் இதன் தாக்கம்பற்றி உடனடியாக தகவல் இல்லை. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்களை முடக்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின் என்று போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின. இது ஸ்டாலின் மற்றும் ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் போன்று புதின் உருவாக்க மேற்கத்திய நாடுகள் அனுமதித்து விட்டன. கீவில் ரஷ்யா தாக்குதலை நிறுத்தாது என்பதால் நாம் நமது ஆன்மாவை, சுதந்திரத்தை, இறையாண்மையை இழப்போம்” என கூறி உள்ளார்.