நான் இன்னும் சாகவில்லை!: நித்யானந்தா

கைலாச தீவில் தங்கி இருப்பதாக கூறும் பிரபல சாமியார் நிதியானந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தான் இன்னும் சாகவில்லை என அவர் வெளியிட்டுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கியதை அடுத்து அடுத்தடுத்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரம் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அதன் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நித்யானந்தாவுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் இன்னும் மரணம் அடையவில்லை என அவர் கைப்பட எழுதிய கடிதமும் புகைப்படங்கள் நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:-

பரமசிவனின் ஆசிகள்! என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம். சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். இதுவரை என்னை சுற்றியுள்ள, மக்கள், அவர்களது பெயர்கள், ஊர்கள், மற்றும் நினைவுகள் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

இன்னும் கைலாசத்தின் அதிர்வுகள் மனநிலையில் அதிகமாக உள்ளது. சந்தேகிப்பவர்கள், புகைப்படங்கள் போலியானவை என நீங்கள் உணர்ந்தாலும், திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வர சமாதிக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள், நீங்கள் என்னைத் தெளிவாகப் பார்ப்பீர்கள். என்னைக் கண்காணித்து, ஆதரவு தந்து, உதவி செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி. இன்னும் சிகிச்சையில் இருந்து வெளியில் வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதை விட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் போன்றவர்கள். மனித உடல் மற்றும் மனதின் மீது சூப்பர் நனவின் தாக்கத்தைப் படிப்பதில் என்னுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.

எனது நித்ய சிவ பூஜை மட்டும் தினமும் தவறாமல் நடக்கிறது, ஆனால் இன்னும் சாப்பிடுவதும் தூங்குவதும் தொடங்கவில்லை. நித்ய பூஜைக்காக நான் சமாதியிலிருந்து வரும்போது மட்டும், ​​சில சமயங்களில் உங்கள் கருத்துகளைப் பார்த்து என் பதிலைத் தருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி, நலம் பெற வாழ்த்திய பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால் உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை. இது உடலின் வழியாகச் செயல்படும் ஒரு காஸ்மோஸ் போன்றது. மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் இன்னும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை.

பரமசிவனின் இணையான பிரபஞ்சங்களை அனுபவிப்பதுதான் இது. பரமசிவன் இந்த உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு ஒரு ஸ்பீக்கர் அல்லது லவுட் ஸ்பீக்கராக என்னைப் பயன்படுத்துவதைப் போல் உணர்கிறேன். மனிதனாக இங்கு இருப்பதை விட கைலாசத்தில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். ஆனால் உங்கள் அனைவரிடமும் உள்ள அன்பு, என்னை இங்கு அழைத்து வந்து உங்களுடன் நேரம் செலவிட வைக்கிறது. என் பக்தர்களுக்கு சமாதி தோன்றும், பார்வை தரும், குணப்படுத்தும், பதிலளிக்கும். அது உடலை பயன்படுத்தி பதில் அளிப்பதைவிட, விரல்களால் டைப் செய்வதை விட எளிதாக இருக்கிறது. மேலும் புகைப்படங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள். மகிழுங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள்!, என பதிவிட்டுள்ளார்.