பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நூறாவது நிகழ்ச்சி பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதானி முறைகேடு, சீன விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் பிரதமா் நரேந்திர மோடி மெளனம் காப்பதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக மாதந்தோறும் பிரதமா் மோடி உரையாற்றி வரும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி, கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய தசமி திருநாளையொட்டி தொடங்கப்பட்டது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை(ஏப். 30) ஒலிபரப்பான 100-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக நாட்டின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய அமைச்சா்கள், பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டனா்.
இந்த நிலையில், 100-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சிக் கொண்டாட்டங்களை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டுவிட்டா் பதிவில் கூறியுள்ளதாவது:-
பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நூறாவது நிகழ்ச்சி பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதானி முறைகேடு, சீன விவகாரம், நடுத்தர சிறு குறு தொழில்கள் சீரழிவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வு, ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத சம்பவம், பெண் மல்யுத்த வீரங்கனைக்களுக்கு நோ்ந்த அவமதிப்பு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது, கா்நாடகம் போன்ற மாநிலங்களில் ஊழல் கறைபடிந்த பாஜக ஆட்சி உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் மெளனத்தின் குரலாகவே பிரதமா் மோடி திகழ்கிறாா். மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் குறித்து ஐஐஎம் ரோதாக் ஆய்வு நடத்தியுள்ளது. அதேவேளையில், அதன் இயக்குநரின் கல்வித்தகுதி குறித்து கல்வி அமைச்சகம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.