கர்நாடகாவில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சீமான், அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் குறைந்தபட்சம் ஈஸ்வரப்பாவுடன் சண்டையாவது போட்டிருக்கலாம். நானாக இருந்தால் ஒரே அறை விட்டிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்துக் கொண்டிருந்த போது, திடீரென பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தச் சொன்னார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தி, கன்னட நாட்டு கீதத்தை ஒலிக்கச் செய்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த போது, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மேடையில் இருந்தார். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதற்கு அவர் எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை. கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் முன்பே தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, ஷிவமொக்காவில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தின் போது, கன்னட கீதத்தை ஒலிபரப்புமாறு எம்எல்ஏ ஈஸ்வரப்பா கூறினார். ஆனால், ஆபரேட்டர்கள் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிபரப்பிவிட்டனர். அந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கூட சரியான பாடல் இல்லை. அதனுடைய ட்யூன், மெட்டு சரியாக இல்லை. அது நமது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பதாகவே இருந்தது. அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:-
அந்தந்த நாடுகளின் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்த பிறகுதான் மற்ற நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்க வைக்க வேண்டும். ஆனால், கர்நாடாகாவில் தமிழர்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலித்ததற்காக அதை பாதியிலேயே நிறுத்தியது கொடுமை. எங்களை இன வெறியர்கள், மொழி வெறியர்கள் என சொல்வார்கள். கர்நாடகாவில் நடந்ததை என்னவாக பார்க்கிறீர்கள்? தமிழ்த்தாய் மொழியை பாதியில் நிறுத்தியது தேச ஒற்றுமையா? இதை ஒருவர்கூட கண்டிக்கவில்லை. தமிழ்நாடு முதல்வரே அதை கண்டிக்கவில்லை.
மெட்டு சரியில்லாததால் தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தச் சொன்னதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால் ஈஸ்வரப்பா அப்படி சொல்லவில்லையே. ரிதம் சரியில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் மீது ஈஸ்வரப்பாவுக்கு அவ்வளவு பற்று உள்ளதா என்ன? ரிதம் பற்றி பேச அண்ணாமலை பெரிய இசை மேதையா? சரி, மெட்டு சரியில்லை என்றால் அண்ணாமலை தமிழ்த்தாய் வாழ்த்தை முறையாக பாடி இருக்கலாம் தானே.. ஏன் பாடவில்லை? பிரதமர் மோடி தமிழ் மூத்த மொழி என்கிறார். ஆனால் அவர் ஆட்சியில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிப்பதைக் கூட தடுக்கிறார்கள். அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் குறைந்தபட்சம் ஈஸ்வரப்பாவுடன் சண்டையாவது போட்டிருக்கலாம். நானாக இருந்தால் ஒரே அறை விட்டிருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.