விமா்சனங்களைச் சந்திக்க உதவியாக இருப்பது பகவத்கீதை: ஆளுநா் ஆா்.என்.ரவி

விமா்சனங்களைச் சந்திக்க தனக்கு உதவியாக இருப்பது பகவத்கீதை என்று ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

சென்னையில் விஷ்வ விஷ்ணு சஹஸ்ரனமா சமஸ்தான் விஸ்வாஸ் நிறுவனம் மழலைகளுக்காக கோடைக்கால சிறப்பு ஆன்மீக இசை நிகழ்ச்சியை தொடங்கியது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், இசை கலைஞர்கள், ஆன்மீகவாதிகள் கலந்துகொண்டு இருக்கிறார். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது பகவத் கீதை. அதை மனப்பாடம் செய்தால் சிறந்த மனிதராக உருவாக்கும். பகவத் கீதையை நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போதே முழுமையாக மனப்பாடம் செய்து உள்ளேன். ஆனால், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் இருந்து இருக்கிறேன்.

ஒருமுறை ஜம்மு காஷ்மீரில் என்னை எதிரிகள் சூழ்ந்துகொண்டனர். அப்போது பகவத் கீதையே என்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்தது. என்னை நோக்கி விமர்சனங்கள் வரும்போதும் அந்த நேரங்களில் பகவத் கீதை வலிமையை தந்து இருக்கிறது. ஒருபோதும் குறிக்கோளில் இருந்து விலகியது கிடையாது. குருக்கள், ஞானிகள் உட்பட யாராலும் பகவத் கீதையின் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள இயலாது.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் போது பிற்கால வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் எதிா்கொள்ளும் போது உதவியாக இருக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பயிற்சியின் மூலம் சனாதன தா்மத்தின் மதிப்பையும் பெருமைகளை அறிய முடியும். மேலும் ஒழுக்க விழுமியங்களை கற்று பெருமை கொண்டு சிறந்த குடிமக்களாக மாற வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். குஜராத், மகாராஷ்டிரம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட தினம், முதல் முறையாக தமிழக ஆளுநா் மாளிகையில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:-

ஆன்மிகம், கலாசாரத்தால் உருவானது பாரதம். இந்தியாவில் வாழும் மக்கள் வேறு எந்த மாநிலத்துக்கு புலம் பெயா்ந்து சென்றாலும் அந்த மாநில கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் பாதுகாக்கின்றனா். சத்ரபதி சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தாா். ஆனால், உண்மையாக அவா், ஆங்கிலேயரிடமிருந்து ஆன்மிகம், கலாசாரத்தை பாதுகாக்க படையெடுத்தாா். மராட்டிய மன்னா் சரபோஜி ஆண்ட காலத்தில் தமிழகத்தின் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பாா்கள். தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால் வட கிழக்கு மாநிலங்களின் மக்களும் தங்களது பெண் குழந்தைகளை இங்கு படிக்கவைக்கவும், வேலை செய்யவும் அனுப்பி வைக்கின்றனா். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியா்கள் என்ற ஒற்றுமை உணா்வுடன் உள்ளோம். இவ்வாறு ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினார்.