தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு காஷ்மீரில் தடை!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செல்போன் செயலிகள் மூலம் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத்தைப் பரப்பும் செயல் நடைபெற்று வருவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிப்வைஸர், எனிமா, சேஃப்விஸ், விக்ரமே, மீடியாஃபயர், பிரையர், பிசாட், நந்த்பாக்ஸ், சிஆனியன், ஐஎம்ஓ, எலிமெண்ட், செகண்ட் லைன், ஜாங்கி, திரீமா ஆகிய 14 செல்போன் செயலிகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு இந்த செல்போன் செயலிகள் மூலம் தகவல்களை அனுப்பவும், பெறவும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தீவிரவாத செயல்களைப் பரப்ப இந்த செல்போன் செயலிகளை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டத்திட்டங்களை பின்பற்றாத இந்த செயலிகளின் பட்டியலை மத்திய புலனாய்வு அமைப்புகள் தயாரித்து மத்திய உள்துறைக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்தே காஷ்மீரில் செல்போன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.