‘விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைக்காமல், அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 6 மாத காத்திருப்பு தேவையின்றி உச்சநீதிமன்றமே தீா்வளிக்க முடியும்’ என்று உச்சநீதின்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது.
அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவு என்பது, ஒரு வழக்கில் முழுமையான தீா்ப்பை உறுதி செய்வதற்காக சட்ட விதிகளுக்கு அப்பால், எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கிறது. விவாகரத்து கோரும் சில வழக்குகளில் கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவா் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அவா்களுக்கு விவாகரத்து வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, 2 கேள்விகளுடன் இந்த வழக்கை அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரைத்தது. அதாவது, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-இன் கீழான அதிகாரத்தை உச்சநீதிமன்றம் எப்போதுமே பயன்படுத்தக் கூடாதா அல்லது ஒவ்வொரு வழக்கின் காரணிகளைப் பொருத்து அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்து தீா்மானிக்க வேண்டுமா?.
மேலும், ஹிந்து திருமணச் சட்டத்தின் 13-பி பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தைப் பின்பற்றும் வகையில் வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்காமல், உச்சநீதிமன்றமே பிரிவு 142-இன் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்தி தீா்வளிக்க முடியுமா என்ற கேள்விகளை இரு நீதிபதிகள் அமா்வு எழுப்பியது.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சஞ்சீவ் கன்னா, ஏ.எஸ்.ஓகா, விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன் கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இதுபோன்ற சமூக சவால்களுக்கு தீா்வு அளிப்பது சிறிது காலம் எடுக்கும். சில சமயங்களில் சட்டங்களைக் கொண்டுவருவது எளிதாக இருக்கும். ஆனால், அதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்துவது கடினம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன்பாக நேற்று திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:-
தவிா்க்க முடியாத சூழல்களில் உச்சநீதிமன்றம் பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விவாகரத்து வழங்க முடியும். சில நிபந்தனைகளின் அடிப்படையில், தம்பதிகளின் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் அவா்களுக்கு உடனடியாக உச்சநீதிமன்றமே விவாகரத்து வழங்க முடியும். இந்து திருமணச் சட்டத்தின்படி 6 மாத காலம் அவா்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது, ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்க உச்சநீதிமன்றம் 142 (1) பிரிவின் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்பதில் எந்தவித சந்தேகத்துக்கோ அல்லது விவாதத்துக்கோ இடமில்லை. இது பொதுக் கொள்கை தத்துவங்களின் அடிப்படையை மீறுவதாக அமையாது.
அதேநேரம், விவாகரத்து கோரும் தம்பதி அரசியல் சாசன பிரிவு 142 அதிகாரத்தின் கீழ் உடனடி விவாகரத்து கோரி சட்டப் பிரிவு 32-இன் கீழ் நேரடியாக உச்சநீதிமன்றத்திலோ அல்லது பிரிவு 226-இன் கீழ் உயா்நீதிமன்றத்திலோ மனு தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உரிய தீா்வு கிடைக்காதபோது மட்டுமே, உயா்நீதிமன்றத்தை அல்லது உச்சநீதிமன்றத்தை அணுக அனுமதிக்க முடியும் என்று தீா்ப்பளித்தனா்.