மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த பிறகு நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழரின் பெருமையை போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும் என்று கூறினார்.
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கருத்து வேறுபாடுகள் அனைத்து படைப்புகளிலும் இருக்கும். எல்லா படங்களுக்கும் மாற்று கருத்துக்கள் வரும். அது இந்த படத்தில் இருந்தாலும் கூட, மக்கள் இதனை பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் வீரனாக இருக்கும் மணிரத்னத்தையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தயும் பாராட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.