இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக 6-வது முறையாக இன்று பொறுப்பேற்றார். 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை காலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து கொழும்புவில் இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.