நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெர்று வந்தார் மனோபாலா. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டார். ரசிகர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் இப்படி அடுத்தடுத்து திடீர் என்று இறப்பதை நினைக்கும்போதே பயமாக இருக்கிறது என ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் தெரிவித்து வருகிறார்கள்.
நகைச்சுவை நடிகரான மயில்சாமி இறந்தபோது அவரின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு கொடுமை, கொடுமை என்றார் மனோபாலா. மயில்சாமியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இத்துடன் நிறுத்திக்கொள் ஆண்டவா, போதும், தாங்க முடியாது என்றார். இந்நிலையில் அந்த மனோபாலாவே இன்று இல்லை என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு வந்தவர் பின்னர் நடிகராகவும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கை கொடுத்தது. தன் நகைச்சுவை காட்சிகளால் நம் கவலை எல்லாம் மறந்து சிரிக்கும்படி செய்தார். நிஜத்திலும் கலகலப்பானவர் மனோபாலா. யூடியூப் சேனல் வைத்து சுவாரஸ்யமான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். டுவிட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வந்தார். ரசிகர்கள் ஏதாவது கேள்வி கேட்டு டுவீட் செய்தால் உடனே பதில் அளிப்பார்.
தன் யூடியூப் சேனலுக்கு குறும்படங்களை அனுப்பி வைக்குமாறு கூறி மனோபாலா டுவீட் செய்தார். அது தான் அவரின் கடைசி டுவீட்டாக இருக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. மயில்சாமி இறந்த பிறகு பழைய நினைவுகளை அசை போட்டு அது தொடர்பான புகைப்படங்களாக டுவிட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து வந்தார். தன் குரு பாரதிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். தான் இறந்துவிடுவோம் என்று மனோபாலாவுக்கு ஏற்கனவே தோன்றிவிட்டதா, அதனால் தான் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 1982ம் ஆண்டு ரிலீஸான ஆகாய கங்கை படம் மூலம் இயக்குநர் ஆனவர் மனோபாலா. கேப்டன் விஜயகாந்தின் சிறைப்பறவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன், சத்யராஜின் மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட பட படங்களை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நைனா. அவர் தமிழ் தவிர்த்து கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் தலா ஒரு படம் இயக்கியிருக்கிறார்.
சங்கராந்தி ஸ்பெஷலாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் மனோபாலா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் கோஸ்ட்டி ஆகும்.
தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்த மனோபாலா, சில படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஏராளமான சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமாக உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவருக்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக இருந்த இவர், கடந்த ஜனவரி மாதம் இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா இன்று திடீரென காலமானார். கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சென்னை சாலிகிராமம் அபுசாலி தெருவில் உள்ள மனோ பாலா இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இவரது மறைவு செய்தி கேட்டு ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.