பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
2002-ம் ஆண்டு குஜராத் மத மோதல்களின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அவரது குடும்பத்தார், 2 வயது மகன் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டை கொந்தளிக்க வைத்த இந்த கொடூர குற்றச்செயலில் ஈடுபட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 11 பயங்கர குற்றவாளிகளுக்கும் 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் குஜராத்தில் ஆளும் பாஜக அரசு இந்த 11 பயங்கர குற்றவாளிகளையும் அண்மையில் விடுதலை செய்தது. இந்த குற்றவாளிகள் சிலர் பாஜக தலைவர்களுடன் பொது மேடைகளில் பங்கேற்கின்றனர். பில்கிஸ் பானு குற்றவாளிகளுக்கு குஜராத்தில் வரவேற்பளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பில்கிஸ் பானு தரப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் 11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு, நன்னடத்தை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் குஜராத் அரசிடம் இருந்து உச்சநீதிமன்றம் கோரியது. ஆனால் குஜராத் அரசும் மத்திய அரசும் உரிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தன.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒரு கொலை வழக்கை கூட்டு பாலியல் வன்கொடுமை, படுகொலை வழக்குடன் ஒப்பிடுவது என்பது ஆப்பிள், ஆரஞ்சு இரண்டுமே ஒன்று என்பதை போல குறிப்பிடக் கூடாது. ஏற்கனவே குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு பரோல் விடுப்பும் கூட தந்திருக்கின்றனர். அத்தனை குற்றவாளிகளும் சமமானவர்கள் இல்லை. இன்று பில்கிஸ் பானு பாதிக்கப்பட்டிருக்கிறார். நாளை வேறு ஒரு பெண் பாதிக்கப்படலாம். அது நீங்களாகவோ, நானாகவும் இருக்கலாம். ஆகையால் குஜராத் அரசு இதில் ஒரு முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவு எடுப்போம். மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்ட காரணத்தாலேயே குஜராத் மாநில அரசு மனசாட்சிப்படி நடக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. இத்தகைய விவகாரங்களில் இறுதியான உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட வேண்டும் என்றனர் நீதிபதிகள்.
இதனையடுத்து இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போதும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய விடுதலையான 11 பேரின் வழக்கறிஞர்கள் அவகாசம் கோரினர். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் கடுமையாக அவர்களை சாடினர். விசாரணையே நடைபெறக் கூடாது என நினைக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பினர். அத்துடன், மே 19-க்குப் பின் கோடை விடுமுறை தொடங்குகிறது; ஜூன் 16-ந் தேதி நான் ஓய்வு பெறுகிறேன். இப்படி அவகாசம் கேட்டு இவ்வழக்கை நான் விசாரிப்பதையே தடுக்க நினைக்கிறீர்களா? நீதிமன்றத்துக்குள் இத்தகைய போக்கு சரியானது அல்ல.. உங்கள் கடமைகளை மறக்கக் கூடாது என்றும் நீதிபதி ஜோசப் காட்டமாக கேட்டார். இந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது.