‘தி கேரளா ஸ்டோரி’: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!

பெண்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது போன்று தயாரிக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதையடுத்து இந்த படத்தில் சர்சைக்குரிய வகையிலான 10 காட்சிகள் நீக்கப்பட்டு புதிய ‘டீசர்’ வெளியிடப்பட்டது. 32 ஆயிரம் பெண்கள் மாயம் என்பது 3 பெண்கள் என்று மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) திரையிடுவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்து உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த திரைப்படத்தை கேரளாவில் திரையிடக் கூடாது என்று அம்மாநிலத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த படம் திரைக்கு வந்தால் கேரளாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று அம்மாநில அரசு கருதுகிறது. எனவே இந்த திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த படத்தை திரையிட்டால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநில உளவுத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போராட்டம் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் இந்த திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த திரைப்படத்தை திரையிடாமல் இருப்பது நல்லது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்ற மொழிகளில் இந்த படம் வெளியாகும்போது அந்த மாநிலங்களில் நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு திரைத்துறையினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.