நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே.சுரேஷ்-ஐயும் விசிக விமர்சித்துள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனம் தற்போது மீண்டும் தலைப்பு செய்தியாகியுள்ளது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் வட்டி தருவோம் என கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி இந்த நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்தனர். அவ்வாறு சுமார் 1 லட்சம் பேரிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவரவே, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது தமிழக பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்தசூழலில் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகரும், தயாரிப்பாளரும் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. டெல்லி லாபியின் மூலமாக கைது நடவடிக்கையை தடுப்பதாக கூறி 12 கோடி பணம் பெற்றதாக கூறப்பட்டது. அப்படி பெறப்பட்ட பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்ததாகவும் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து போலீசாரின் பிடி இருகவே, வெளிநாடு தப்பிச் சென்ற நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, நேற்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கும், ஆர்கே சுரேஷுக்கு இருக்கும் தொடர்பை விசிக விமர்சித்துள்ளது. இது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் கொள்ளயடித்த ஆர்.கே. சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி பேர்வழி இப்போது பாஜகவில் OBC பிரிவு பொறுப்பாளராக இருந்தாலும், இதற்கு முன் ஓம்தமிழர் கட்சியிலும் இருந்தவர் தான். கடந்த 2019ம் ஆண்டு அமீரா எனும் திரைப்படத்தில் அண்ணன் சீமான் அவர்களுடன் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் தடபுடலாக நடந்தது. தயாரிப்பு யார் தெரியுமா? அண்ணன் சீமான் அவர்கள் தான். தம்பி திரைக்களம் சார்பாக crowd fund திரட்டப்பட்டது. ஆண்டுக்கு 5 படங்கள் தயாரிக்கப்போவதாக சீமான் அறிவித்தார். உடனடியாக 5 கோடி ரூபாய் வந்தடைந்தது. அதற்கு பிறகும் பல கோடி ரூபாய் திரட்டப்பட்டது. திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவித்து 5 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு படமும் வந்தபாடில்லை. ஆருத்ரா நிதி நிறுவனம் மூலமாக கொள்ளையடித்த பாஜக பிரமுகரும், Crowd fund மூலமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஓம்தமிழர் சீமானும் ஒரு குட்டையில் ஊறித்திளைத்த மட்டைகளாகவே அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.