நாட்டில் அமைதி, வளர்ச்சி ஏற்பட காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்றும், தேசவிரோதிகளிடம் இருந்து அக்கட்சி தேர்தல் நேரத்தில் உதவி பெற்று வருவதாகவும் பிரதமர் மோடி பேசினார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொள்ள 5 நாட்கள் தான் இருக்கின்றன. வருகிற 8-ந் தேதி மாலை 5 மணியுடன் பகிரங்க பிரசாரம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று 4-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் பிரசாரத்தை நிறைவு செய்து கலபுரகியில் தங்கிய மோடி, நேற்று காலை விமானம் மூலம் அங்கிருந்து தட்சிண கன்னடா மாவட்டம் முல்கிக்கு வந்தார். அங்கு நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தின் வளர்ச்சி, அமைதிக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது, தொழில் முதலீட்டாளர்கள் வெளியேறி விடுவார்கள். காங்கிரஸ் பயங்கரவாதத்தின் தலைவர்களை பாதுகாக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஈர்க்கும் அரசியலை காங்கிரஸ் செய்கிறது. இது தான் காங்கிரசின் அடையாளம். நீங்கள் இத்தகைய காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதை அனுமதிப்பீர்களா?. கர்நாடகம் பாழாவதை நீங்கள் அனுமதிப்பீர்களா?. நாடு முழுவதும் அமைதியை விரும்பும் மாநிலம் எதுவாக இருந்தாலும் அந்த மக்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை, அங்கிருந்து காங்கிரசை வெளியேற்றுவது தான்.
நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நடைபெற்றால் அதை பாா்த்து கொண்டு காங்கிரஸ் கட்சியால் அமைதியாக உட்கார முடியாது. மேலும் அக்கட்சியால் அதை சகித்துக்கொள்ள முடியாது. பிரித்தாளுவதின் அடிப்படையில் தான் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றவர்களை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சமூக விரோதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது மட்டுமின்றி அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்தது. இந்த ‘ரிவர்ஸ் கியர்’ மூலம் காங்கிரஸ் அத்தகைய தேச விரோதிகளிடம் இருந்து தேர்தல் நேரத்தில் உதவிகளை பெறுகிறது. ஒட்டுமொத்த தேசமும் ராணுவத்தை மதிக்கிறது, அவர்களை கவுரவிக்கிறது. ஆனால் ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதித்தது. இந்தியாவின் ஜனநாயகம், வளர்ச்சியை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை அவமதிக்கிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் இந்தியாவின் ஜனநாயகத்தை பாராட்டுகின்றன. இது என்னால் அல்ல, நீங்கள் போடும் ஓட்டுகளால் வெளிநாடுகள் பாராட்டுகின்றன. இது உங்கள் ஓட்டின் பலத்தை காட்டுகிறது. இந்த ஓட்டுகள் மூலம் தான் டெல்லியில் பலமான, நிலையான ஆட்சி அமைந்துள்ளது. தொழில், விவசாயம், மீன்வளம், துறைமுகங்கள் வளர்ச்சியில் கர்நாடகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தை டெல்லியில் உள்ள செல்வந்தர் குடும்பத்திற்காக முதன்மையான ஏ.டி.எம். ஆக மாற்ற விரும்புகிறது. காங்கிரஸ் ஒவ்வொரு திட்டத்திலும் 85 சதவீத கமிஷன் பெறுகிறது. இதன் மூலம் கர்நாடகத்தை வளர்ச்சியில் பின்னோக்கி காங்கிரஸ் அழைத்து செல்கிறது. மேலும் கா்நாடகத்தை காங்கிரஸ் குழியில் தள்ளும்.
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளிடம் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சியிலும் அதே போன்ற தலைவர்கள் தான் உள்ளனர். அதனால் கர்நாடக மக்கள் பா.ஜனதாவை தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மக்கள் பாராட்டுவார்கள். உலகில் இந்தியா 3-வது மிகப்பெரிய புத்தாக்க தொழில் செய்வதற்கான சூழலை கொண்டுள்ளது. நமது நாட்டில் தற்போது ஒரு லட்சம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் 100 ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் இருக்கின்றன. புத்தொழில் நிறுவனங்களுக்கு பா.ஜனதா கொள்கை ரீதியாக ஆதரவு அளிக்கிறது. இளம் புத்தாக்க ஆராய்ச்சியாளர்களை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா இன்று 5-வது மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. பொருளாதாரத்தில் 3-வது இடத்தை பிடிக்க உங்களின் ஆதரவு எனக்கு தேவைப்படுகிறது. கர்நாடகத்தின் ஆதரவு எனக்கு தேவை. கர்நாடகாவின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனவே மே10 -ந் தேதி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.