இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஜெகதீப் தன்கர்

இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறினார்.

அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள திப்ருகர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

சிலர் இந்தியாவின் ஜனநாயக நற்பெயரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் களங்கப்படுத்த முயன்று வருகிறார்கள். அதற்காக, இந்தியாவில் ஜனநாயக பண்புகள் இல்லை, மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று பொய்யான பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும்போது, நமது ஜனநாயகம் குறித்து கூப்பாடு போடுவது ஏன்? நான் துணிந்து, நம்பிக்கையுடன் சொல்வேன். இந்த பிரபஞ்சத்திலேயே துடிப்பான ஜனநாயகம் நிலவும் நாடு, இந்தியா மட்டும்தான். எனவே, மாணவர்கள் இத்தகைய தீய பிரசாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வழிகாண வேண்டும். இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும். தேசியத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் இருந்துதான் இத்தகைய பொய் பிரசாரம் பரவுகிறது. அங்கு படிக்கும் மாணவர்களும், வேலை பார்க்கும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த நாட்டையே விமர்சிக்கிறார்கள். சில அரசியல்வாதிகள், உலகம் முழுவதும் சென்று சொந்த நாட்டையே விமர்சிப்பதை பார்க்கிறீர்கள். இது இந்திய கலாசாரம் அல்ல. நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, இந்தியா சார்பில் பங்கேற்க அவரைத்தான் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தேர்ந்தெடுத்தார். இதுதான் நமது கலாசாரம்.

நாடாளுமன்றம், விவாதம் நடத்துவதற்கான இடம். அது அமளிக்கான இடம் அல்ல. விவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 5-வது இடத்தில் இருக்கிறது. நமது முன்னாள் காலனி ஆதிக்க நாட்டை முந்தியது நமக்கு பெருமைதான். இன்னும் சில ஆண்டுகளில், 3-வது இடத்தை பிடிக்கும். முந்தைய ஆட்சிகளில், அதிகார மையம், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவை முற்றிலும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதால், நிதி வீணாவதில்லை. புறக்கணிக்கப்பட்ட சாதனையாளர்களை பற்றிய தகவல்கள், பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.