ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் நேற்று இந்தியா பாதுகாப்பு படை சார்பாக தீவிரவாதிகளை சோதனை செய்ய படைகள் அனுப்பப்பட்டன. சமீபத்தில் அங்கே நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. இந்த ஆபரேஷனின் போது தீவிரவாதிகள் – ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சரமாரி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. இதில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியில் உள்ள கேஸ்ரி மலையில் இந்த தீவிர எதிர்ப்பு நடவடிக்கை நடந்தது. ஒரு குகைக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து ராணுவத்திற்கு சீக்ரெட் தகவல் கிடைத்து அங்கே சென்று சோதனை செய்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் காயம் அடைந்த 6க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த 6 பேரில் 2 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அங்கே கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.