குஜராத்தை சேர்ந்த மோடிக்கு கர்நாடகாவில் என்ன வேலை?: திருமாவளவன்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மருத்துவமனையை தனியாருக்கு கொடுக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி விசிக எம்பி திருமாவளவன் எதிர்வினையாற்றி இருந்தார். மேலும், ஜிப்மரில் உயர்சிகிச்சைக்கு கட்டண நிர்ணயம் செய்துள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதனை கடுமையாக விமர்சித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன் தமிழ்நாட்டில் விளம்பரம் தேடிக்கொள்ளட்டும் என்றும் விழுப்புரம் எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். தமிழிசையின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். தான் வேறு மாநில ஆளுநர் என்பதை மறந்து தமிழகத்தின் அரசியல் விஷயங்களில் மூக்கை நுழைக்கும் தமிழிசை இப்படி பேசுவதற்கு சிந்திக்க வேண்டும் என்று அவருக்கு எதிர்வினைகள் கிளம்பின.

இந்த நிலையில் தமிழிசையின் பேச்சுக்கு திருமாவளவன் இன்று பதிலடி கொடுத்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் தமிழிசையின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன் கூறியதாவது:-

ஜிப்மர் மருத்துவமனையில் ஏழை, எளியோர் பயன்படுத்தி வந்த பல்வேறு வசதிகளுக்கு தற்போது கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதை கைவிடும்படி வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு நான் பேசியதை தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக கண்டித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு புதுச்சேரியில் என்ன வேலை என்று கேட்கிறார். இது எந்த மாதிரியான பார்வை என்று புரியவில்லை. குஜராத்தை சேர்ந்த மோடிக்கு கர்நாடகாவில் என்ன வேலை என்று நாம் கேட்க முடியுமா? குஜராத்தில் போட்டியிடாமல் அவர் எதற்கு உ.பி.யில் போட்டியிடுகிறார் என்று கேட்க முடியுமா?

இந்தியாவை ஒரே தேசமாக பார்க்கும்போது, இந்தியாவில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு குரல் கொடுப்பதென்பது என்னை போன்றவர்களின் கடமை. அதிலும் குறிப்பாக புதுவை ஜிப்மரில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். எனது சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த மக்களும் ஜிப்மரில் சிகிச்சை பெறுகிறார்கள். மக்கள் நலன் கருதி எந்த மண்ணில் இருந்து போராடினாலும் அது நமது கடமை என்று உணராமல் ஒரு ஆளுநர் பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த அணுகுமுறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.