கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம் என்று மங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் முகாமிட்டு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மூடபித்ரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதுபற்றி பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து வருகிறார். கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெற்று ஊழல் செய்து வருகிறார்கள். கர்நாடகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர். அதுபற்றி பா.ஜனதாவினர் சிந்திப்பது இல்லை. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையில்லாத காரணத்தால் உயிர் இழந்துள்ளனர். அதுபற்றி பா.ஜனதா தலைவர்கள் நினைத்து பார்ப்பதில்லை. மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியோ, பா.ஜனதா தலைவர்களே பேசுவதில்லை.
பயங்கரவாதம், நாட்டின் பாதுகாப்பு பற்றியே பிரதமர் மோடி பேசி வருகிறார். கர்நாடகத்தில் நடக்கும் ஊழல், வேலையில்லா திண்டாட்டம் தான் உண்மையான பயங்கரவாதம். மக்களுக்கான எந்த பணிகளையும் பா.ஜனதாவினர் செய்வதில்லை. பயங்கரவாதம், மதம் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் அனைத்து பணி இடங்களும் நிரப்பப்படும். பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணத்துடன், மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். பா.ஜனதாவின் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டி காங்கிரக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.