மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: உச்ச நீதிமன்றம்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும், தேவையான நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மணிப்பூரில் உள்ள மெய்தி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. மெய்தி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை பழங்குடியின அமைப்புகள் ஒற்றுமை பேரணி நடத்தினர். எதிர்தரப்பினரும் பேரணி நடத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியதுடன், மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி பழங்குடியின அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மணிப்பூர் நிலவரம் தொடர்பாக மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூரில் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவ படைகள் அனுப்பி கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது, அமைதி குழு கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணிப்பூர் வன்முறை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய மாநில அரசுகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும், தேவையான நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.