மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்த கூடாது: ராமதாஸ்

மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையைப் பொருத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கையை மட்டும் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனா் அலுவலகம் மூலம் மத்திய அரசு நடத்தி வருகிறது. மீதமுள்ள இடங்களுக்கான மாணவா் சோ்க்கை மாநில அரசுகள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நடப்பாண்டு முதல் அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனா் அலுவலகமே மாணவா் சோ்க்கை கலந்தாய்வை நடத்தும் என்றும், அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

மாணவா் சோ்க்கையை தடையின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி பல்வேறு நீதிமன்றங்கள் ஆணையிட்டதன் அடிப்படையில், அனைத்து மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்களுக்கும் நேரடியாக மாணவா் சோ்க்கை நடத்த தீா்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வாதம் ஆகும். ஒருபுறம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் பேசிக் கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.