தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி அத்திரைப்பட தயாரிப்பு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு அப்படி எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். அதேநேரத்தில் இத்திரைப்படம் மத மோதலை ஏற்படுத்தக் கூடியது என்பதால் தடை விதிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்திருந்தார். ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து கேரளா உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. கேரளா உயர்நீதிமன்றமும் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பு தரப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏதுவாக உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்பது ஒரு மனு. அதேபோல மேற்கு வங்க அரசின் தடையை நீக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றுகின்றனர்; அப்படி மதம் மாற்றப்படுகின்ற பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புனைவுகளின் அடிப்படையிலானது; இரு மதப் பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதாக கூறி எதிர்க்கப்பட்டு வருகிறது.