பெண்களை அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்கிறோம்: மு.க.ஸ்டாலின்

பெண்களை அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமையுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் மிட்சுபிஷி நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இதனைக் கூறினார். மேலும், அந்த விழாவில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

கடந்த ஆண்டு நான் அதிகம் கலந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளின் வரிசையில் எடுத்துப் பார்த்தால், தொழில் துறை நிகழ்ச்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், தொழில் துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் தங்கம் தென்னரசுவை சந்திக்கும் போதெல்லாம், “இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?” என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. மின்னணுவியல் துறையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. உங்களது இந்தத் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில், 1,891 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. .

50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், ஏற்கனவே உள்ள தங்கள் மையங்களை விரிவுபடுத்தியுள்ளன. இதன்மூலம், 1 லட்சத்து 22 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது மிக மிக கவனிக்கத்தக்கது. நீங்கள் இந்த நிறுவனத்தை அமைப்பதன் மூலமாக பல துணை நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பு ஏற்படும். இறக்குமதியானது குறையும்.
இந்தத் திட்டத்தில், 60 விழுக்காட்டுக்கு மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். பெண்களின் நலன் பேணுவதில் அதிக கவனம் செலுத்திவரும் இந்த அரசின் முயற்சிகளுக்கு இது வலுசேர்க்கும். பெண்களை அதிக அளவில் பணியமர்த்திடும் நிறுவனங்களை நாங்கள் வரவேற்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.