சின்னம்மாவை கூடிய விரைவில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். டிடிவி தினகரன் உடனான சந்திப்புக்கு ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று சொல்வார்கள். நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள். சசிகலாவையும் டிடிவி தினகரனையும் எதிரியாக நினைத்து அரசியல் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம். 2017ஆம் ஆண்டு சசிகலாவினால் ஓரங்கட்டபட்டவர் இன்று அதே சசிகலாவை வாய்க்கு வாய் சின்னம்மா என்று சொல்கிறார். சசிகலாவினால் முதல்வர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமியும் அவரது சகாக்களும் இன்று சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதை ஏற்றுக்கொள்ளாத ஓ.பன்னீர் செல்வமோ, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்முலாவின்படி டிடிவி தினகரனுடன் கைகோர்த்து உள்ளார். சசிகலாவையும் சந்திக்கப்போவதாக கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்து வருகிறார். இதுபற்றி டெல்லியில் அமித்ஷாவிடம் அவர் தெளிவுபடுத்தி விட்டார். எடப்பாடியின் கோரிக்கையை பாஜக தலைமையும் ஏற்றுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் சென்னை, அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்துக்கு சென்றுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அங்கு ஒரு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். எங்களுக்கு சுயநலம் எதுவும் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் இயக்கம் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்து கொண்டு இருக்கிறவர்களிடம் இருந்தும், பண பலத்தை வைத்துக் கொண்டு ஆணவம், அகங்காரத்துடன் செயல்படுபவர்களிடம் இருந்து மீட்டு எடுக்கும் முயற்சியில் இணைந்துள்ளோம் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சுயநலத்துடன் நாங்கள் இணையவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி உதயகுமார், இந்த சந்திப்பு சந்தர்ப்பவாத சந்திப்பு என்றும் இதனால் தமிழகத்தில் எந்த விதமான தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இப்போது அடைக்கலம் தேடி தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக சென்றிருக்கிறார். கடந்த 10 மாதங்களாக நீதிமன்றம் சென்று அவர் வைத்த வாதங்கள் தோல்வியடைந்த பின்னர் தொண்டர்களிடத்தில் தோல்வி, மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த பின்னால் யாரை எதிர்த்தாரோ எந்த குடும்பம் தமிழகத்தில் அதிமுகவில் இருக்கக்கூடாது என்று தர்மயுத்தம் நடத்தினாரோ அந்த குடும்பத்திடம் அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார் என்றும் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், சின்னம்மாவை விரைவில் சந்திப்பேன் என்று கூறினார். ஆர்.பி. உதயகுமார் இது சந்தர்ப்பவாத சந்திப்பு என்று கூறியுள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வமோ, அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.