ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான செளமியா ரெட்டியை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம்!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் போராடிய காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்து பிரசாரம் செய்ததற்கு தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தல் பிரசாரம், ஒரு மாநில தேர்தல் பிரசாரம் போல இல்லாமல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. ஆகையால் இம்மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பாஜகவின் போராட்டம். இதற்காக பிரதமர் மோடி இடைவிடாமல் கர்நாடகாவில் அடுத்தடுத்து பிரசாரங்களை மேற்கொண்டார். மத்திய அமைச்சர்கள் பட்டாளமும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர்.

பாஜகவுக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் காங்கிரஸ் கட்சியும் இதுவரை இல்லாத வகையில் தீவிர பிரசாரம் நடத்தியது. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா என ஒட்டுமொத்த குடும்பமும் தேர்தல் பிரசாரம் செய்தது. கர்நாடகா தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் முக்கிய இடம் பிடித்தன. இரு கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் கவனத்தைப் பெற்றன. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் கர்நாடகா தேர்தலுக்காக பிரசாரம் செய்தனர். தமிழர் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இதில் ஒன்று ஜெயநகர் தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பிரசாரம் செய்தார்.

திருமாவளவனின் இந்த பிரசாரத்தை இப்போது பாஜக சர்ச்சையாக்கி இருக்கிறது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சூர்யா தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழ்/தமிழர் விரோதி திருமாவளவன் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபனமாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான கர்நாடகா ஜெயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ செளமியா ரெட்டிக்கு கூச்ச நாச்சமின்றி வாக்கு கேட்கிறார். இப்பெண் இன்றுவரை மீண்டும் ஜல்லிக்கட்டை தடை செய்வேன் என கங்கனம் கட்டிக்கொண்டு தான் திரிகிறார். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழர் விரோதிகளுடன் கூட கூட்டு வைப்பேன் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அற்ப அரசியலை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஜெயநகர் பகுதியில் வாழும் தமிழர்கள் அரசியல் வியாபாரி திருமாவளவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது.