இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து: அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டை அரசியலாக்க அனுமதிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியது.

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது. அதோடு முஸ்லிம்களுக்கு பதிலாக லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக 4 சதவீத இடஒதுக்கீட்டை பிரித்து வழங்குவதாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4% இடஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக் கூடாது என கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்தது உச்சநீதிமன்றம். கர்நாடகா அரசும் 4% இடஒதுக்கீடு ரத்து அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என தொடர்ந்து பேசினார். இந்த நிலையில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக அமித்ஷா தொடர்ந்து பேசி வருவது குறித்து மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போது பொதுவெளியில் மத்திய அமைச்சர் அமித்ஷா எப்படி பேசலாம்? வழக்கு விசாரணைக்காக நிலுவையில் இருக்கும் போது அமித்ஷா இப்படி பேசியது தவறு; பொதுவெளியில் மக்கள் பிரதிநிதிகள் பேசுகிற போது கவனத்துடன் பேச வேண்டும் என கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்க அனுமதிக்கவும் முடியாது எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில், 4% இடஒதுக்கீடு ரத்து என்ற புதிய முடிவின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என மீண்டும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.