நாம் தமிழர் சீமானுக்கு தமிழக சட்ட ஒழுங்கு கட்டுப்பட்டுள்ளது: விபுல் ஷா!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் அச்சுறுத்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்கிற ஒற்றை மனிதர்தான் காரணம் என்று தயாரிப்பாளர் விபுல் ஷா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

கேரளாவில் 32 ஆயிரம் இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து தீவிரவாதிகளாய் மாற்றியதான கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5 ஆம் தேதி வெளியாகியது. படம் வெளியானதில் இருந்தே அதனை தடை செய்யக்கோரி இஸ்லாம் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று உளவுத்துறை எச்சரித்தும்கூட தமிழக அரசு போலீஸ் பாதுகாப்புடன் இப்படத்தை திரையிட அனுமதித்தது.

இந்த நிலையில், சென்னை ‘ஸ்கை வாக்’ மாலில் இப்படம் வெளியானதால் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், ‘ இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் இப்படத்தை திரையிட ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழக அரசு உடனே இப்படத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்களே இப்படத்துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் சென்று போராட்டம் செய்வோம் என்றும், மற்றவர்களை பார்க்க விடாமல் கத்தி இடையூறு ஏற்படுத்துவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதனை அடுத்து கலக்கம் அடைந்த மல்டிப்ளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தயாரித்துள்ள விபுல் அம்ருத்லால் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சீமானை குறித்து பரபரப்பாக பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு நிலவி வரும் எதிர்ப்புகளை குறித்து விபுல் ஷா கூறியதாவது:-

சீமான் என்கிற ஒரு தனி நபர் ஒரு மாநில அரசையே மிரட்டி ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அதனால் இப்படம் சுந்தந்திரமாக வெளியிட முடியாமத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து பேசியபோது, எங்களுக்கு படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளது ஆனால் இங்கு பார்க்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர். திமுக அரசு கண்டிப்பாக இதற்கு நடவடிக்கை எடுத்து தமிழகத்திலும் ‘தி கேரளா ஸ்டோரி’ பிரச்சினை இல்லாமல் வெளியாக வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

இப்படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கேரளா நீதிமன்றம் கூட இப்படத்துக்கு தடை விதிக்கவில்லை. நீதிமன்றங்களே உத்தரவிட்ட பிறகும்கூட ஒருவர் மிரட்டி வருகிறார், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அவருக்கு முன்னால் தலை வணங்குகிறது. அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கையும் எடுக்கவில்லை, திரை அரங்குகளுக்கு பாதுகாப்பும் வழங்கவில்லை. இவ்வாறு விபுல் ஷா கூறியுள்ளார்.