டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் இந்த ஊழல் குறித்து ஆளுநர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகச் செயல்படும் பார்களை மூட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையேற்று நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பேரணியை நிறைவு செய்த கிருஷ்ணசாமி, ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
திராவிட மாடல் என்று பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மதுபான உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவை டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை மூலம் வரி வருவாயாக ரூ.44 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்த ஆண்டில் ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்த்த அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடெங்கும் சாராய கடைகளையும் சட்டவிரோத பார்களையும் திறந்துவைத்து தமிழர்களின் சீரழிவுக்கு காரணமானவர்கள் என்பதே கருணாநிதியின் வரலாறாக இருக்கும். எத்தனை சிலைகள் வைத்தாலும், அவர் பெயரில் நூலகங்கள் கட்டினாலும் அந்த வரலாறு மாறாது.
மதுபான கொள்முதல் சில்லறை விற்பனை, காலி அட்டைப்பெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும். டாஸ்மாக் துறையில் நடைபெறும் இந்த ஊழலுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம். அமைச்சர் செந்தில் பாலாஜியும், உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்படும் வரையில் மது கொள்முதலை நிறுத்த ஆளுநர் ரவி உத்தரவிட வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் இந்த ஊழல் குறித்து ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும். இந்த போராட்டம் துவக்கமே தவிர, முடிவு அல்ல. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.