தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் சாலை பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச டேப்லட்களை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

கேரள மாநிலத்தில் பரவி வந்த தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. கேரள மாநிலத்திலும் தற்போது அதன் தாக்கம் இல்லை. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது; இதுகுறித்து தமிழக மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

கேரள மாநிலத்தில் சவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை. அதுபோன்ற தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு பின்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். 340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.