கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றியை பிரியங்கா காந்தி, சிம்லாவில் உற்சாகமாக கொண்டாடினார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். 10-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, 12-ந் தேதி தனிப்பட்ட பயணமாக அவர் தாயார் சோனியா காந்தியுடன் இமாசலபிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவுக்கு சென்றார். அங்கு புறநகர் சாரப்ராவில் உள்ள தனது மாளிகையில் சோனியாவுடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பிரபலமான அனுமன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருப்பது பிரியங்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் அவர் அங்குள்ள மாலில் (வணிக வளாகம்) வலம் வந்தார். மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் மற்றும் மூத்த தலைவர்களுடன் அவர் தேனீர் பருகினார். அந்த மாலுக்கு வந்த பொதுமக்களுடன் சாதாரண முறையில் கலந்துரையாடினார். அவர்களுடன் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டார். அங்கிருந்து இந்தியன் காபி ஹவுஸ் சென்ற அவர் தன்னுடன் வந்த காங்கிரஸ் தலைவர்களுடன் உற்சாகமாக காபி குடித்தார். தன்னுடன் வந்த தலைவர்களுக்காகத்தான் தான் காபி குடிப்பதாக அவர் கூறியபோது அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தியன் காபி ஹவுசுக்கு அவர் சென்றது ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது. அந்த காபி ஹவுஸ் பணியாளர் சங்கத்தை அமைப்பதில் அவரது தந்தை ராஜீவ் காந்தியின் தாத்தா பண்டித ஜவகர்லால் நேரு முன்னோடியக இருந்தார், அவரும் அங்கு காபி குடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.