இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.
இவ்வாறு பல எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் சமீபத்தில் படத்தில் நடித்திருந்த அதா சர்மாவுக்கு விபத்து ஏற்பட்டது. அவர் விபத்தில் சிக்கிய தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும் என்று தொடர்ந்து அதா சர்மாவை இணையத்தில் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் அதா சர்மா இது தற்செய்லாக நடந்த விஷயம்தான் விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம். தொடர்ந்து என்னை போனில் விசாரித்தவர்களுக்கும் நன்றி என்று கூறி பதிவிட்டிருக்கிறார். ஆனாலும் அவரது பாதுகாப்பை இன்னும் பலப்படுத்திக் கொள்ளச் சொல்லி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘அனைத்துப் பகுதிகளிலும் திரைப்படம் வெளியாகும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் தடை செய்யப்பட்டது ஏன்’ என்று கேள்வி எழுப்பியது. அதற்கு மேற்கு வங்க அரசுத் தரப்பில், திரைப்படம் வெளியானால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உளவுத்துறை மூலம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மறைமுகமாக தடை செய்யப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக பதில் தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கின் நான்காவது எதிர்மனுதாரரான தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்குரைஞர் சபரிஸ் சுப்ரமணியன் ஆகியோர் மூலம் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி கே. சங்கர் தகவல் அளித்துள்ள அந்த பதில் மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவல்களை திரைப்படத் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். உண்மையில், போதிய வரவேற்பு இல்லாததன் காரணமாகவே இத்திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. இதனால்தான், திரையரங்க உரிமையாளர்கள் கடந்த மே 7-ஆம் தேதி இத்திரைப்படத்தை தாமாக திரையிடாமல் நிறுத்திவிட்டனர். இந்தப் படம் ஹிந்தி மொழியில் மட்டுமே உள்ளது. இந்த திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு பெரும் விமர்சனம் எழுந்தது. சில முஸ்லிம் அமைப்புகள் தரப்பில் இந்த திரைப்படமானது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் ‘இஸ்லாமோஃபோபியாவை’ ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டின. இத்திரைப்படம் மாநிலம் முழுவதும் 19 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மே 5-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தைத் திரையிடுவதை அரசு தடுத்ததாக மனுதாரர்கள் தரப்பில் உரிய ஆவணங்களை காட்டவில்லை. உண்மையில், ஒவ்வொரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கிலும் கூடுதலான போலீஸ் பாதுகாப்பை அரசு அளித்திருந்தது. இந்தப் படத்துக்கு அரசால் மறைமுகத் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. திரைப்படத்திற்கு விளம்பரம் தேட வேண்டும் என்று நோக்கில் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.