ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்கள் உதய தினம் ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்படும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிக்கிம் தினத்தில் ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:-
16.5.1975-இல் சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது. அந்த நாள் சிக்கிம் தினமாக கொண்டாடப்படுகிறது. மிக அருமையான கலாசாரமும் பண்பாடும் கொண்ட மாநிலம் சிக்கிம். ஆங்கிலேயா் ஆட்சிக்கு முன்னா் சிக்கிமில் மன்னா் ஆட்சி நடைபெற்று வந்தது. சிக்கிமில் இயற்கை உரங்கள் மட்டுமே சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அங்கு நெகிழி பயன்பாடு இல்லை.
காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஆகியவை நடத்தியதன் மூலம் அந்த மாநிலங்களுடன் கலாசாரம், பண்பாடு ஆகியவை பரிமாறிக்கொண்டதுடன் ஒரு நட்பு ஏற்பட்டது. இனி ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்களின் உதய தினம் ஆளுநா் மாளிகையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், பண்பாட்டை தமிழக மக்கள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.