திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதில் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து வாழ்த்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார். மேலும் பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி விட்டதாகவும் தனது அறிக்கையில் தெவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிக்கையின் மூலம் பதில் தெரிவித்துள்ளார் பாஜக மகளில் அணியின் தேசிய தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் எழுந்தோம். கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. 66 தொகுதிகளில் வென்று பலமிக்க எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. 1951-ல் ‘பாரதிய ஜனசங்கம்’ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பாஜக சந்தித்த தோல்விகளை, நெருக்கடிகளை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் குடும்பத்தின் பிடியில் உள்ள மாநில கட்சிகளின் அதிகார பலம், ஆள் பலம், பணபலத்தை தாண்டி, மத அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகளால் பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்து, நெருப்பாற்றில் நீந்திதான் தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இருமுறை நாட்டை வழிநடத்தி வந்திருக்கிறோம்.
ஜனநாயகத்திற்கு எதிராக, சமத்துவத்திற்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக, கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் ஒரே குடும்பத்திலிருந்து பிறப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் காங்கிரஸும், திமுக போன்ற மாநில கட்சிகளும் கர்நாடகத்தில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை கொண்டாடி வருகின்றன. நாட்டை உயிர் என போற்றும் தேசியவாதிகள் தோற்றால், பிரிவினை சித்தாந்தம் கொண்டவர்கள் மகிழ்ச்சி அடைவது இயல்புதான்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ‘பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டார்கள் என்றும் திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. 2024 பொதுத்தேர்தலில் வெல்ல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என தெரிவிதுள்ளார். மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
இந்திரா காந்திக்கு தனிப்பெரும்பான்மை இருந்தபோது இன்றைய முதல்வர் ஸ்டாலின் சிறையில் இருந்தார். ராஜீவ் காந்தி தனி பலத்துடன் ஐந்தாண்டுகள் ஆண்டபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தன. இந்திரா, ராஜீவ் காலத்து ‘முரசொலி’ இதழ்களை மட்டும் மீண்டும் படித்து பார்த்தால், பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்று ஸ்டாலின் ஒருபோதும் சொல்ல மாட்டார். மேலும் திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது என்று புளகாங்கிதம் அடைந்திருக்கும் ஸ்டாலினுக்கு வரலாற்றின் சில பக்கங்களை நினைவூட்ட விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு திராவிட நிலப்பரப்பில்தான் ஆதரவு கிடைத்தது. ராமஜென்ம பூமி இயக்கம் மூலம் நாடெங்கும் இந்து எழுச்சிக்கு வித்திட்ட, ‘விஸ்வ இந்து பரிஷத்’ துவங்கப்பட்டதும் கர்நாடகத்தின் உடுப்பியில்தான். உடுப்பியில் நடந்த துறவியர்கள் மாநாட்டில்தான், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை, இந்து மதத்தின் அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த துறவிகளும் இணைந்து நிறைவேற்றினர். அதற்கு செயல் வடிவம் கொடுக்கவே ‘விஸ்வ இந்து பரிஷத்’ அமைப்பு தொடங்கப்பட்டது. இப்படி திராவிட நிலப்பரப்பில் இருந்து தான் ஆர்.எஸ்.எஸ். எழுந்தது. அதிலிருந்துதான் பாஜகவும் எழுந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.