டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாக உள்ளது. தற்போது இருக்கும் நாடாளுமன்றம் சுமார் 96 ஆண்டுகள் பழைமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. 2021, 2022-ம் ஆண்டு கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்கிறது என விமர்சனங்களும் எழாமல் இல்லை.
ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கடந்த நவம்பர் மாதம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பணிகள் முடிவடைய தாமதம் ஆனது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து, திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை முறைப்படி வழங்கினார்.புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல ராஜ்யசபாவிலும் 300 பேர் அமர வசதி உள்ளது. அதேநேரம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டால் 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் லோக்சபாவில் வசதி செய்யப்பட்டு உள்ளது. டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனம் இந்த கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விரிவான வாகன நிறுத்த பகுதி உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகின்றன.