அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் அகவிலைப்படி உயா்வை காலந்தாழ்த்தியே வழங்கி வருகிறது. தற்போது 2023 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முதல் வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் 4 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 3 மாதங்கள் காலம் தாழ்த்தி அகவிலைப்படி உயா்வை அரசு வழங்க உள்ளது. இது அரசு ஊழியா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.