ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்: சூர்யா

சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைகோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதனை வரவேற்று நடிகர் சூர்யா போட்டுள்ள டுவிட்டர் பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளது. இதற்காக நடிகர் சூர்யா காளைகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக் குறித்து சூர்யா போட்டுள்ள டுவிட்டர் பதிவு செம்ம வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பீட்டா அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து, 2017ம் ஆண்டு பொங்கல் தினத்தில் போராட்டம் தொடங்கியது. சென்னையின் மெரினா கடற்கரையிலும் மதுரையிலும் மாணவர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். சாதி, மதம், அரசியல் கடந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது. இதனால் உடனடியாக மத்திய அரசும் அன்றைய தமிழ்நாடு அரசும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், இந்த அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பு என சொல்லப்படும் பீட்டா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியால் மனிதர்கள் காயப்படுகிறார்கள், உயிரிழக்கிறார்கள்; எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இறுதியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், அது தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பினை அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலதரப்பினும் பாராட்டி வரவேற்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடிகர் சூர்யா வரவேற்று டுவிட் செய்துள்ளார். அதில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஒருசேரத் தருகிறது. தமிழ் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு, கன்னட கம்பாலா கலாச்சாரம் இரண்டுக்கும் கிடைத்த வெற்றி. மேலும், இந்த வழக்கில் வெற்றி கண்ட இருமாநில அரசுகளுக்கும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் கூறியுள்ளார் சூர்யா.