இந்தியாவின் நவீன வரலாற்றில் காந்தி தொடங்கி மோடி வரை குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லிக்கும் குஜராத்துக்கும் இடையேயான உறவை மேம்படுத்த ஸ்ரீ டெல்லி குஜராத்தி சமாஜ் உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்டு சுமார் 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய அமித்ஷா மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். மேலும் இந்த சமாஜ்ஜியத்தில் தொண்டாற்றி வரும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
குஜராத்திகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு டெல்லியில் ஏராளமான சமூகத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் குஜராத்திகள் இதில் தனித்துவமாக தெரிகின்றனர். அவர்கள் தங்கள் கலசாச்சார, பண்பாட்டை காலங்காலமாக பாதுகாத்து அதை பின்பற்றி வருகின்றனர். மட்டுமல்லாது ஒழுக்கம்தான் இவர்களை தனித்துவமானவர்களாக காட்டுகிறது. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது குஜராத் மண்தான். அந்த மண் ஏராளமான தலைவர்களை உருவாக்கியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க தலைவர்கள்தான் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி. இதில் காந்தி நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டுள்ளார். இந்தியா அவரது முயற்சியால்தான் சுதந்திரம் பெற்றது. அதேபோல சுதந்திரத்திற்கு பின்னரும் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர்தான் சர்தார் படேல். இவருடைய முயற்சி ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது. அதேபோல நாட்டின் ஜனநாயகத்தை தழைக்க வைத்த மற்றொரு தலைவர் மொரார்ஜி தேசாய். இவர் காலத்தில் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது என்றால் அது மிகையில்லை.
இந்த வரிசையில் தற்போது நான்காவது இடத்தில் இருப்பவர்தான் பிரதமர் நரேந்திர மோடி. இவரது ஆட்சி காலத்தில் நமது நாடு சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றார். அப்போது இந்தியா பொருளாதார அளவில் 11வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 4வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச நாடுகளே இந்த வளர்ச்சியை வியந்து பார்க்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. அதேபோல நாட்டின் எல்லைகளும் வலுவாக்கப்பட்டுள்ளன. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் நம் நாட்டின் எல்லையை தொட கூடாது என அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் சுமார் 130 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்கள் மீது இந்த அரசும் பிரதமரும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அதேபோல ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நான்காவது இடத்திற்கும் வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடிதான் காரணம். இவரது நிர்வாகத்தின் கீழ் இந்தியா மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராக நாடு பரினமித்திருக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் 370வது சட்டப் பிரிவை நீக்கியதன் மூலம் அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை மேற்கொண்டு 9 ஆண்டுகள் ஆன பின்னரும் இதனை எதிர்த்து இதுவரை ஒரேயொரு பயங்கரவாத செயல்கள் கூட நடைபெறவில்லை. ஏனெினல் ராணுவத்தை அந்த அளவுக்கு பிரதமர் வலுப்படுத்தி வைத்திருக்கிறார். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.