பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து கெஜ்ரிவால் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, பிரதமர் பொறுப்புக்கு உரிய மரியாதை கொடுக்காமல் பேசுவது ஆணவத்தின் உச்சம் என்று விமர்சித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது. சாதாரணமாக 2,000 ரூபாய் நோட்டைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் 2021 மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 245 கோடியாகவும், 2022 மார்ச் மாதம் 214 கோடியாகவும் குறைந்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 2018-19 ஆம் ஆண்டிலேயே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை புதிதாக அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. 2020-ம் ஆண்டில் இருந்தே ஏ.டி.எம். மையங்களில் ரூ.2,000 நோட்டுகள் வழங்குவதும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்படி படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் குறைய தொடங்கிய நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் 2 ஆயிரம் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்தது.செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த ரூபாய் தாள்களை வங்கிகளில் செலுத்திவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகிறது. அந்த வகையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ரூ.2000 நோட்டுகள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஓழியும் என்று முதலில் பிரதமர் கூறினார். இப்போது 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுமக்கள் அவதிப்படுவது அவருக்கு புரிவதில்லை” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.
பிரதமர் குறித்து இப்படி பேசுவது முறையல்ல என்று பாஜக பிரமுகரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து குஷ்பு டுவிட்டரில் கூறுகையில், “ஆணவத்தின் மொத்த உருவத்தையும் காட்டுகிறது. அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தால் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார்.