தமிழ்நாடு கோவளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை, நேற்று முன்தினம் மே 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட தமிழருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள மீனவ கடற்கரை கிராமமான கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர். அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் ராஜசேகர். அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்து வந்த ராஜசேகருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது.இதையடுத்து, உடனடியாக அதற்குரிய பயிற்சிகளைத் தொடங்கி, தொடர்ந்து மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றார். ஒரு வருட காலமாக மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். 6 மலை உச்சிகளில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் கனவை நோக்கி நடை போட்டார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி குளிரைத் தாங்கவேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும் மனதையும், குளிருக்குத் தயார் செய்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு உறுதியோடு தயாரானார். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை நேற்று (மே 19) அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். எவரெஸ்ட் உச்சியைத் தொடும் தனது கனவை நிஜமாக்கியுள்ளார் தமிழரான ராஜசேகர். ஒரு மாதத்திற்கும் மேலான கொடுமையான பயண அனுபவத்தில் ஏகப்பட்ட சோதனைகள், தடைகளைக் கடந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார் ராஜசேகர். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார் ராஜசேகர்.
தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது நபராக எவரெஸ்ட் உச்சியை எட்டியிருப்பவர் ராஜசேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில் ராஜசேகர் பச்சைக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச்செய்கிறார்கள். அந்தவகையில், கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.