தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க இந்தியா உதவுகிறதா? இந்தியா பணம், ஆயுதங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதா? என்பது தொடர்பாக டெல்லி வந்து சென்ற ஜனநாயகப் போராளிகள் கட்சி நடத்துகிற முன்னாள் விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த 11-ந் தேதி என்னிடம் விசாரணை நடத்தினர். கொழும்பில் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் வழங்கினர். பின்னர் கடந்த 15-ந் தேதி சுமார் 5 மணிநேரம் என்னிடம் தொடர் விசாரணை நடத்தினர். என்னிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் இந்தியாவை மையப்படுத்தியதாக, தொடர்புபடுத்தியதாக இருந்தது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றதன் அடிப்படையில் இந்த விசாரணை, கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.
இலங்கையில் என்ன அரசியல் செய்ய வேண்டும் என இந்தியா கட்டளையிட்டுள்ளது? இதற்காக இந்தியா வழங்கிய நிதி உதவி எவ்வளவு? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த எப்படி பணம் கிடைக்கிறது? இந்தியா இதற்கு பணம் தருகிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கு இந்தியா திட்டம் தீட்டியுள்ளதா? அப்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய இந்தியா ஆயுதங்கள், பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதா? என்கிற கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. இவ்வாறு கதிர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக, மூத்த தமிழ் தேசிய அரசியல் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை பல்வேறு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் ஏற்கவில்லை. அப்போது, இந்திய உளவுத்துறையானது விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க பழ.நெடுமாறன் மூலம் முயற்சிக்கிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.